Tamilசெய்திகள்

விவசாயிகளுடன் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை 14வது நாளாக இன்றும் தொடர்கின்றனர். விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என பேச்சுவார்த்தையின்போது விவசாய சங்கங்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், மத்திய அரசு சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய தயாராக இல்லை. திருத்தங்கள் செய்யவே விரும்புகிறது. இதனை விவசாய சங்கங்கள் ஏற்கவில்லை.

விவசாயிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதுவரை 5 சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 6ம் சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, நேற்று மாலை, உள்துறை மந்திரி அமித் ஷா, விவசாய சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மத்திய அரசின் நிலைப்பாட்டை அமித் ஷா தெரிவித்தார். இதேபோல் விவசாய சங்க நிர்வாகிகளும் தங்கள் நிலைப்பட்டில் உறுதியாக இருந்தனர். அரசுத் தரப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால், விவசாய சங்க நிர்வாகிகளோ 3 வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதனால், அமித் ஷாவுடனான பேச்சுவார்த்தையின்போது எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. வேளாண் மந்திரியுடன் இன்று நடைபெறவிருந்த 6-ம் கட்டப் பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.