மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் 4-வது முறையாக தமிழகத்துக்கு வருகிறார். அவர் ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வரும்போதும் மத்திய அரசின் பல்லாயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
கூட்டணி குறித்து தே.மு.தி.க. இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிகிறது. அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொள்வாரா? என்பதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். இதற்கான அழைப்பை அ.தி.மு.க. தான் கொடுக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணிக்கு பலம் கிடையாது. தற்போது அதில் இருப்பது நால்வர் அணி இதற்கு முன்பு அந்த அணி கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., இருந்தது. இப்போது தி.மு.க.வுடன் சேர்ந்து உள்ளது.
விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் ரூ.6 ஆயிரம் தேர்தலுக்காக கொடுக்கப்படும் லஞ்சம் என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார். கொடுத்தும் வாங்கியும் பழக்கப்பட்டவர்களுக்கு அதுதான் நினைவுக்கு வரும்.
தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். தி.மு.க.வில் மத்திய மந்திரியாக இருந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உள்ளார்களா?
தமிழக பிரச்சனையை மத்திய அரசுக்கு எடுத்து சென்று தீர்வு கண்டு உள்ளார்களா? அவர்கள் தமிழகத்துக்கு எதுவும் செய்யாதவர்கள். பதவி சுகத்தை அனுபவித்து நாட்டை கொள்ளையடித்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.