விவசாயிகளின் வருமானம் மற்றும் கடன்! – ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு முடிவு
நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. விவசாயிகளின் வருமானம், 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதுபற்றி மத்திய வேளாண்துறை இணை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பாராளுமன்ற மக்களவையில் எழுத்துமூலம் கூறியதாவது:-
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, இந்த ஆண்டு 77-வது சுற்று ஆய்வு நடத்த உள்ளது. அப்போது, விவசாய குடும்பங்களின் நிலை பற்றியும் ஆய்வு நடத்தப்படும்.
விவசாய குடும்பங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய விரிவான மதிப்பீடு அளிப்பதே இதன் நோக்கம். அதாவது, விவசாயிகளின் வருமானம், செலவு, கடன் ஆகியவை பற்றி இதில் கணக்கு எடுக்கப்படும்.
இதற்கு முன்பு, 2012-2013-ம் சாகுபடி ஆண்டில்தான் இதுபோன்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு இத்தகைய ஆய்வு நடத்தப்படாததால், விவசாயிகளின் வருமான அதிகரிப்பு பற்றிய தகவல் இல்லை.
புதிய சூழ்நிலை, தேவை, நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய சோதனை நடத்தும் முடிவு எடுக்கப்படுகிறது.
குடும்பங்களின் நுகர்வோர் செலவு, வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை ஆகியவை பற்றி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது.
இவ்வாறு கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார்.