X

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.90 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது – பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை ஆற்றினார். அவர் 95 நிமிடங்கள் பேசினார். அவரது உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களின் தொகுப்பு இது:-

* 21-ம் நூற்றாண்டின் தேவைகளையொட்டி, நவீன உள் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த வகை நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்.

* நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் இனி வரும் தலைமுறையினருக்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும். சிறிய குடும்பம் என்ற கொள்கையை பின்பற்றுவோர் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர். இதுவும் தேசப்பற்றின் ஒரு வடிவம்தான்.

* நாம் ஏற்றுமதியை எப்படி பெருக்கலாம் என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

* முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தி முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.

* அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக இந்தியா மாறுவது உறுதி.

ஒரே அட்டை

* ஒரே நாடு ஒரே அட்டை என்ற வகையில் ஒரு அட்டை (ஸ்மார்ட் கார்டு) உருவாக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பஸ் கட்டணம், வாடகைக்கார் கட்டணம், வாகனம் நிறுத்துமிட கட்டணம் செலுத்தலாம். பொருட்கள் வாங்கலாம். ஏ.டி.எம். மையங்களில் பணமும் எடுக்கலாம்.

* சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு முறை பயன்படுத்துகிற பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை நிறுத்துவோம். சணல்பை, துணிப்பைகளை பயன்படுத்துவோம்.

* காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் நிறைவேறுவதற்கு ஒவ்வொருவரும் உதவிக்கரம் நீட்டுவது கடமை. அரசியல் சாசன சட்டத்தின் பிரிவுகள் 370, 35-ஏ ஆகியவற்றை ரத்து செய்ததின் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேல் கனவு நனவாகி உள்ளது.

* எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடத்துகிற நாடுகளை அம்பலப்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்து கடுமையாக பாடுபடும்.

* இந்தியா திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடு என அறிவிக்கும் நிலை வரும்.

* ஒவ்வொரு கிராமத்திலும் பிராட்பேண்ட் இணைய தள வசதி ஏற்படுத்தப்படும்.

ரூ.90 ஆயிரம் கோடி

* கிராமப்புறங்களில் 1½ லட்சம் நல வாழ்வு, சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.

* 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைத்து, டாக்டராக விரும்பும் நமது இளைய தலைமுறையினரின் கனவு நனவு ஆக்கப்படும்.

* 2 கோடிக்கு மேற்பட்ட ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்.

* ஆட்சிக்கு வந்து 10 வாரங்களுக்குள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் முக்கிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

* பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின்கீழ் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.90 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.