விவசாயிகளின் மரணத்திற்கு மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் – முதலமைச்சர் நாராயணசாமி கோபம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த 36 விவசாயிகளுக்கு புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் விவசாயிகளின் உருவபடங்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பி.கே.தேவதாஸ், மகளிர் காங்கிரஸ் தலைவர் பஞ்சகாந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ நாரா. கலைநாதன், அபிஷேகம், சேது செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ம.தி.மு.க. மாநில செயலாளர் கபிரியேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தாமல், பெரிய தொழிலதிபர்கள், முதலாளிகள் மத்தியில் பேசும் போது விவசாய சட்டங்களுக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று அவர்களிடம் கேட்கிறார். இது எந்த வகையில் நியாயம்.
விவசாயிகளின் போராட்டத்தால் நாட்டில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கும், விவசாயிகளின் உயிரிழப்பிற்கும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
நாட்டில் உள்ள 70 சதவீத விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். இந்த போராட்டத்தில் 36 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் போராட்டத்திற்காக உயிர்துறந்த தியாகிகள். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தி.மு.க. சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.