Tamilசெய்திகள்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பா.ஜ.க துணை நிற்கும் – அண்ணாமலை அறிக்கை

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பருவம் தவறி பெய்த மழையினால் காவிரி டெல்டா பகுதியில் அறுவடைக்காக காத்திருந்த நெல் பயிரையும், அறுவடை செய்யப்பட்டு ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய, விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று வெள்ள சேதங்களையும், அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதத்தையும் ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு இன்று (புதன்கிழமை) தமிழ்நாட்டிற்கு வருகிறது.

மத்திய அரசின் நெல் கொள்முதல் ஈரப்பத வரைமுறையின்படி நெல் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு கீழே இருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் தற்போது பெய்த கனமழையினால் ஈரப்பதம் 22 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு தமிழக பா.ஜ.க. துணை நிற்கும். அதே வேளை தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள், ஆட்சிக்கு வந்தபின்னர் கொடுத்த வாக்குறுதிகள் என எதையும் நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது இந்த திறனற்ற தி.மு.க. அரசு.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சிய போக்குடன் செயல்படும் இந்த திறனற்ற தி.மு.க. அரசு இதற்கு மேலும் தாமதிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.