விவசாயத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி! – பட்ஜெட்டில் ஒதுக்கீடு

தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொலைத்தொடர்ப்பு கருவிகள் வழங்கப்படும். 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 தொலைபேசிகள் வழங்கப்படும். இயற்கை வேளாண்மையை மேம்படுத்த மாவட்டந்தோறும் மையங்கள் அமைக்கப்படும்.

பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது. சத்துணவு திட்டத்திற்கான காய்கறி, தாளிதப் பொருட்களுக்கான விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும்.

சிறப்பு திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறைக்கு ரூ.258.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு 38,000 குடியிருப்புகள் கட்டப்படும்.

ஒட்டுமொத்தமாக விவசாயத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்களின் மறுகட்டமைப்பு தொடர்பான சொத்து பரிமாற்றங்களுக்கான பதிவுக்கட்டணம் அதிகபட்சமாக ரூ.3000 என நிர்ணயிக்கப்படும்.

வரிகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,37,964 கோடி வருவாய் கிடைக்கும். வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1,031 கோடி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் திட்டத்தை மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளை தூர்வார ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு, நவீன பாசன வேளாண்மைத் திட்டத்திற்கு ரூ.235.05 கோடி நிதி ஒதுக்கீடு, அணைகள் புனரமைப்புக்காக ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools