X

விழுப்புரம் அருகே சாலை விபத்து – தாய், மகன் பலி

புதுவை முருகங்கம் பாக்கத்தை சேர்ந்தவர் முருகன். இவர் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி தனது தாய் சாந்தி, உறவினர்கள் ஹேமாவதி, ஜெதீஸ்வரி, மங்களவதி, பூர்விதா, கிருஷ்கா, சீதா ஆகியோருடன் ஒரு காரில் நேற்று மாலை புறப்பட்டார். இந்த காரை முருகன் ஓட்டினார். திருத்தணி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்த கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அருவாபாக்கம் கிராமத்தில் பை-பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த இடத்தில் சாலையோரம் டிப்பர் லாரி ஒன்று நின்றது.

இந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. அதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் சென்ற 8 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் உயிர் பிழைக்க அபய குரலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு திரண்டனர். உயிருக்கு போராடிய 8 பேரை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன், அவரது தாய் சாந்தி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மற்ற 6 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலியான முருகனின் உடல் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியிலும், சாந்தி உடல் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.