Tamilவிளையாட்டு

விளம்பர விதிகளை பின்பற்றாதவர்களின் பட்டியலில் டோனி முதலிடம்

பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விளம்பரம் மூலமாக தங்களது பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்வதோடு, அந்தப் பொருட்களை வாங்க வைக்கும் அளவிற்கு பிரபலங்களை நாடுகின்றனர். அப்படி சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளின் விளம்பரத்திற்கும் மக்களை கவரும் வகையில் வசனங்கள் இடம் பெற்று, அவை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

இந்த நிலையில் ஏஎஸ்சிஐ எனப்படும் (Advertising Standards Council of India) இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனி, யூடியூபர் புவன் பம் ஆகியோர் விளம்பர தரநிலையை பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி விளம்பர விதிகளை பின்பற்றாதவர்களின் பட்டியலில் டோனி முதலிடத்திலும், புவன் பம் 2-வது இடத்திலும் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளது.

இவர்களது விளம்பரத்திற்கு புகார் வந்துள்ள நிலையில், அவை குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 55 விளம்பரங்கள் மீது புகார் வந்துள்ளது. ஆனால், அது தற்போது 503 விளம்பரமாக உயர்ந்துள்ளது.

பொருட்களை வாங்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரபலங்கள் நடிக்கும் விளம்பரத்தில் கவனத்தை ஈர்க்க வழிவகை உண்டு. ஆனால், அந்த விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், உண்மை தன்மை, வசனங்கள் ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும். ஆனால், அந்த விஷயங்களில் விளம்பர நிறுவனங்கள் தோல்வி அடைந்துள்ளன என்று அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றன. இது போன்று உண்மை தன்மையை அறிந்து கொள்ளாத 10 விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட விளம்பரத்தோடு நடித்து டோனி முதலிடத்திலும், புவன் பம் 7 விளம்பரத்துடன் 2-வது இடத்திலும் இருக்கின்றனர்.

இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் விதிகளின்படி விளையாட்டு, கல்வி, சுகாதாரம் ஆகிய விஷயங்களில் உள்ள விளம்பரத்தில் நடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இது போன்றவைகளை பாதிக்கும் விளம்பரங்கள் இருக்கவும் கூடாது. பிரபலங்கள் அவற்றில் நடிக்கவும் கூடாது. நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் தற்போது வரையில் 8,951 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதன் மூலமாக 7,928 விளம்பரங்கள் விதியை மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், நான்கில் மூன்று பங்கு ஆன்லைன் என்று சொல்லக் கூடிய டிஜிட்டல் மீடியா மூலமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.