விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி, விலை ஏற்றத்திற்கு காரணமாக இருப்போரை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என முதல்-அமைச்சரிடம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“தமிழகத்தில் சில நாட்களாக, காய்கறிகள், பழங்கள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. பெங்களூரு தக்காளி கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் நாட்டுத்தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

பண்டிகை மற்றும் திருமண நாட்களை முன்னிட்டு காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால், அவை கிடங்குகளில் பதுக்கப்படுவதாகவும், இதன்மூலம் ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாடு தான், விலை உயர்விற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

உளுத்தம் பருப்பு விலை கிலோவிற்கு 22 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், துவரம் பருப்பு, பாசி பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றின் விலையும் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், இதரமளிகை பொருட்களான பூண்டு, புளி,கடுகு ஆகியவற்றின் விலையும் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து உள்ளதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின்றன.

பொருட்களை பதுக்கி வைத்து, பற்றாக்குறை ஏற்படுத்தி, விலை ஏற்றத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும், அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில், மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதும் மாநில அரசின் கடமை. அப்போது தான் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் சிறப்பாக வாழ முடியும்.

எனவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.”

இவ்வாறு பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools