X

விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

அத்தியாவாசிய பொருட்களின் விலைவாசி உயர்வடைந்தது குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

‘அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வால் மக்கள் தற்போது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்தப் பிரச்சினையின் தீவிரம் கருதி, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பதுக்கலை தடுக்கவும், வினியோகத்தை மேம்படுத்தவும் வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

இல்லாவிட்டால், விவசாய விளைபொருட்களின் உற்பத்தி, வினியோகம், பங்கீடு, விற்பனையை கட்டுப்படுத்தும் மாநில அரசுகளின் அதிகாரத்தை திரும்ப அளிக்க வேண்டும். அதற்கு உரிய சட்டங்கள் இயற்றுவதற்கு மாநில அரசுகளை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் மாநில அரசுகள் அதிகாரம் ஏதுமின்றி, மக்கள் படும் அவதியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.’ என்று கூறியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து தானியங்கள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீக்குவதற்கான சட்டத்திருத்த மசோதா, கடந்த செப்டம்பர் 23-ந் தேதியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.