சில தினங்களுக்கு முன் மும்பையில் லக்கி என்ற நாய் ஒன்றை சில விஷமிகள் அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் நடிகை அனுஷ்கா சர்மா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான அனுஷ்கா சர்மாவை சமூக வலைதளங்களில் 60 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள்.
இதைப் பயன்படுத்தி அவர் விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகளைத் தடுக்கும் விதமாக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இதற்காக ஒரு பிரச்சாரத்தையும் அவர் தொடங்கியுள்ளார். இப்பிரச்சாரத்திற்கு ஜஸ்டிஸ் பார் அனிமல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனுஷ்கா சர்மா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:- “மனிதாபிமானமற்ற கொடுமையை எதிர்கொண்டது லக்கி மட்டுமல்ல. நாடு முழுவதும் ஏராளமான நாய்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றன. அவை இரக்கமின்றி தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்ந்து நடக்கின்றன.
வன்கொடுமைக்குத் தள்ளப்படும் விலங்குகளுக்கு நீதி வேண்டும். விலங்குகள் மீதான துன்புறுத்தலைத் தடுக்கும் 1960-ம் ஆண்டின் சட்டம் திருத்தப்பட வேண்டும். இது குறித்து உடனடி கவனம் மற்றும் நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.