மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர 1000 ரூபாய் பஸ் பாஸ் சென்னையில் 29 மையங்களில் வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மே, ஜூன் மாதங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பின்னர் பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து ஜூன் 21-ந்தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடந்த மாதம் பேருந்துகள் ஓடாததால் அப்போது பயன்படுத்தாத பஸ் பாஸை ஜூலை மாதம் 15-ந்தேதி வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஸ் பாஸ் வாங்காதவர்கள் வசதிக்காக தற்போது 1000 ரூபாய் பஸ் பாஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பாஸ் விநியோகத்தின் கால அவகாசத்தை நீட்டித்து வழங்குமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது.
அதனை ஏற்று அதன் கால அவகாசத்தை வருகிற 26-ந் தேதி வரை நீட்டித்துள்ளதால் இந்த பயண அட்டையினை பெற்றுக்கொண்டு அடுத்த மாதம் (ஜூலை 15-ந்தேதி வரை) பயணம் செய்யலாம்.
மேலும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாத அடிப்படையில் பயணம் செய்திட மாதாந்திர பஸ் பாஸ் 1-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் பயணம் செய்ய வழங்கப்பட்டுள்ள மாதாந்திர பஸ் பாஸை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை பயன்படுத்தி பயணம் செய்திட அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தகவலை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.