Tamilவிளையாட்டு

விருத்திமான் சகாவின் கருத்து என்னை காயப்படுத்தவில்லை – ராகுல் டிராவிட்

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர்கள் விருத்திமான் சகா. ரிஷாப் பண்ட் அணியில் இணைந்த பிறகு சகாவின் இடம் கேள்விக்குறியானது.

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சகாவிற்கும், வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் ரிஷாப் பண்டிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இலங்கை அணி இந்தியாவிற்கு வந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான டெஸ்ட் அணியில் சகாவிற்கு இடம் கிடைக்கவில்லை. இளம் வீரர்கள் வந்து கொண்டிருப்பதால் சகாவிற்கு இடம் வழங்கப்படவில்லை என தேர்வுக்குழு அறிவித்தது.

இதற்கிடையே, ராகுல் டிராவிட் தன்னிடம் ஓய்வு குறித்து பரிசீலனை செய்யுமாறு வலியுறத்தினார் என சகா தெரிவித்திருந்தார். மேலும், கங்குலி அணியில் இடம் கிடைக்காதோ என்பது குறித்து கவலைப்பட வேண்டாம் எனக் கூறினார். தற்போது அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சகாவின் கருத்து என்னை காயப்படுத்தவில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நான் உண்மையிலேயே அவரது கருத்தால் காயப்படவில்லை. இந்திய கிரிக்கெட்டிற்கான அவரது பங்களிப்பு, அவரது சாதனை மற்றும் அவருக்கு நான் முழுமையாக மரியாதை கொடுக்கிறேன். என்னுடைய உரையாடல் அந்த இடத்தில் இருந்துதான் வந்தது. நேர்மைக்கும் தெளிவுக்கும் அவர் தகுதியானவர் என நினைக்கிறேன்.

நான் தொடர்ச்சியாக வீரர்களுடன் உரையாடும் வகையிலான உரையாடல்தான் அது. நான் சொல்வது அனைத்தையும் அப்படியே வீரர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது கிடையாது. அது சரியாக வராது. வீரர்களுடன் கடினமான உரையாடல்களை நடத்தலாம். ஆனால், வலுக்கட்டாயமாக சொல்கிறீர்கள்  அல்லது  அவர்களுடன் உரையாடுவதில்லை என்று அர்த்தம் கூடாது ’’ என்றார்.