விருது வென்ற தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருதும், 4 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், 4 பேருக்கு தியான்சந்த் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செஸ் வீரர் பிரக்ஞானந்தாவும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனும் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “உங்களை நினைத்து நாங்களும் பெருமைப்படுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools