விராட் கோலி மிகவும் இழிவாக பேசக்கூடியவர் – இங்கிலாந்து வீரர் குற்றச்சாட்டு

லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது. கடைசி நாள் வரை திரிலிங்காக நகர்ந்த இந்த டெஸ்டில் இரு அணி வீரர்கள் இடையே வாக்குவாதம், சீண்டல்களை அவ்வப்போது பார்க்க முடிந்தது. இதை சுட்டிகாட்டி இந்திய கேப்டன் விராட் கோலியை, இங்கிலாந்து முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மிகவும் இழிவாக பேசக்கூடிய ஒருவர் விராட் கோலி. 2012-ம் ஆண்டில் விளையாடி போது நானே மிரளும் அளவுக்கு அவர் என்னை நோக்கி அடுக்கடுக்காக வசைபாடினார். அதை ஒரு போதும் மறக்க முடியாது. அவரது இந்த செயலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை காட்டி விடும். சச்சின் தெண்டுல்கர், வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற தலைச்சிறந்த வீரர்கள் எல்லாம் களத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். அதற்கு நேர்மாறானவர் கோலி’ என்று சாடியுள்ளார்.

காம்ப்டனின் பதிவை கண்ட இந்திய ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை திட்டி வம்பு இழுத்தபோது எங்கு இருந்தீர்கள்? இந்த மோசமான நடத்தைக்கு உங்கள் ஊரில் என்ன பெயர்? தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் தனது கடைசி டெஸ்டில் ஆடிய போது அவரை பட்லர் வேண்டுமென்றே கிண்டல் செய்தாரே? அப்போது எங்கு இருந்தீர்கள் என்று சகட்டு மேனிக்கு காம்ப்டனை வறுத்தெடுத்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools