X

விராட் கோலி தலைமையில் இந்திய அணி நிறைய சாதித்திருக்கிறது – ரிக்கி பாண்டிங் கருத்து

இந்திய வீரர் விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பான சர்ச்சை இன்றும் நீடித்து வருகிறது. விராட் கோலியின் தலைமை பண்பு, திறமை குறித்து உலகின் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போதே தான் கேப்டன் பதவில் இருந்து விலகுவது தொடர்பாக விராட் கோலி பேசினார் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போதே விராட் கோலி பதவி விலகுவது குறித்து என்னிடம் கூறினார். ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து விலகிவிட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கேப்டனாக இருப்பதை அவர் விரும்பினார். அவரது தலைமை பொறுப்பில் இந்திய அணி நிறைய சாதித்திருக்கிறது.

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியை அதிகமாக விரும்பினார். அவர் மைதானத்தில் விளையாடுவதை ஒரு மணி நேரம் பார்த்தாலே அவருக்கு கிரிக்கெட்டின் மீது உள்ள ஆர்வம் நமக்கு புரிந்துவிடும்.

இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது சாதாரண காரியம் அல்ல. ஏனென்றால் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் கிரிக்கெட் உயிர் போன்றது. அதனாலேயே இந்திய அணி கேப்டனுக்கு பொறுப்பும் அதிகம். விராட் கோலி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக கேப்டனாக இருந்துவிட்டார்.

விராட் கோலி கேப்டனான பின் தான் இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற தொடங்கியது. அவர் கேப்டனில் இருந்து விலகியது அதிர்ச்சியான விஷயமாக இருந்தாலும், பல சாதனைகளை படைத்த கேப்டனாக தான் விலகியுள்ளார்.

இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.