விராட் கோலி சரியான நேரத்தில் பார்முக்கு வந்துள்ளார் – ராஸ் டெய்லர்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர். இவர் தற்போது இந்தியாவில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில், பெங்களூர் அணியில் விராட் கோலியுடன் விளையாடிய நேரத்தை மிகவும் ரசித்தேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் விராட் கோலி பார்முக்கு திரும்பி உள்ளார். அவர் சிறந்த பார்மில் இருக்கிறார்.
வரும் ஆண்டுகளில் நிறைய சதங்கள் அடிப்பார் என்று நம்புகிறேன். இந்த உலக கோப்பையில் இன்னும் நிறைய திறமைகள் வெளிப்படும் என்று நினைக்கிறேன். போட்டி ஆஸ்திரேலியாவில் நடப்பதாலும் நடப்பு சாம்பியனாக இருப்பதாலும் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இந்திய அணி சம பலத்துடன் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் சில ஆட்டங்களில் அவர்கள் விளையாடிய விதம், உலக கோப்பை போட்டிக்கு செல்வதற்கு அவர்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுக்கும். நியூசிலாந்து அரை இறுதிக்கு வருவது போல் தெரிகிறது. கடந்த சில ஐ.சி.சி. போட்டிகளில் கடைசி 4 இடத்துக்குள் நியூசிலாந்து அணி வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் ராஸ் டெய்லர் எழுதிய சுய சரிதை புத்தகம் வெளியானது. அதில் நியூசிலாந்து அணியில் சில வீரர்கள் இனவெறியுடன் நடந்து கொண்டனர் என்றும் தன்னை ஐ.பி.எல். அணி உரிமையாளர் கன்னத்தில் அறைந்தார் என்றும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.