விராட் கோலி காரணமே இல்லாமல் லீவு கேட்கும் வீரர் அல்ல – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆதரவு
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை. தொடர்ந்து எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர் எதற்காக விலகினார் என்ற காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி. சி.சி.ஐ) தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அதன் செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.
ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ. தொடர்ந்து ஆதரவு அளிக்கும். 15 ஆண்டுகளான கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுமுறை கேட்டுள்ளார். அது அவருடைய உரிமை. காரணமே இல்லாமல் லீவு கேட்கும் வீரர் விராட் கோலி அல்ல. நமது வீரர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
20 ஓவர் உலகக் கோப்பையில் ஆடுவது தொடர்பாக விராட் கோலியிடம் விரைவில் பேசுவோம். வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றுவார். ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையின் போது ஹர்த்திக் பாண்ட்யா காயம் அடைந்ததால் 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மா திரும்ப அழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எதிர் காலத்தில் 20 ஓவர் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா நிச்சயம் கேப்டனாக இருப்பார்.
ரோகித்சர்மாவிடம் திறமை இருக்கிறது. அவரது தலைமையில் 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன். கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உள்ளூரில் நடைபெறும் முதல்தர போட்டியில் விளையாடுவது கட்டாயமாகும். தேர்வு குழு தலைவர், பயிற்சியாளர் அல்லது கேப்டன் உங்களி டம் (வீரர்கள்) உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஆட வேண்டும். இது அனைத்தும் ஒப்பந்த வீரர்களுக்கு பொருந்தும்.
வீரர்கள் தனது எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. அதை தேர்வு குழுதான் முடிவு செய்ய வேண்டும். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் மத்திய அரசின் முடிவுப்படி தான் இந்திய அணி பங்கேற்பது தெரிய வரும்.
இவ்வாறு ஜெய்ஷா கூறி உள்ளார்.