Tamilவிளையாட்டு

விராட் கோலியை புகழ்ந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக் கேட்டிங்

சச்சின் பஜாஜ் மற்றும் ஆதித்ய பூஷண் எழுதிய ‘அதிர்ஷ்டத்தை மாற்றுபவர்கள்’ (Fortune Turner) என்ற புத்தகம் மும்பையில் உள்ள ராயல் பாம்பே யாட்ச் கிளப்பில் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் புகழ்பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான பிஷன் சிங் பேடி, பி.சந்திரசேகர், எரப்பள்ளி பிரசன்னா மற்றும் எஸ்.வெங்கட்ராகவன் ஆகியோரை பற்றியது.

இவ்விழாவில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக் கேட்டிங் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கேட்டிங் பேசியதாவது:

ஐசிசி கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இருவித போட்டிகளிலும் சராசரி 50-க்கு மேல் வைத்துள்ளார். அவர் கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்டுள்ள தீராத தாகத்தினால் அவருக்கு கிரிக்கெட் உலகையும் தாண்டி ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள்.

ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நிலைத்தன்மையோடு விளையாடுவதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் இருவரும் விராட் கோலிக்கு இணையாக விளையாடி வருகின்றனர் , இருந்த போதிலும் தொடர்ச்சியாக ரன்குவிப்பதில் விராட் கோலியின் திறமை அசாத்தியமானது. எனவே தற்போது கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் என்ற பட்டத்துக்கு விராட் கோலி தகுதியானவர்.

மேலும், எனக்கு டெஸ்ட் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒருவர் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த வீரர் ஆக உருவாக வேண்டுமெனில் முதலில் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என கோலி கூறியுள்ளது அற்புதமானது என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *