உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்ட் ராபின் முறையில் மோதவேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 35 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அனைத்து ரசிகர்களும் விராட் கோலி -நவீன் உல் ஹக் மோதல் குறித்து ஆவளுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். டுவிட்டரில் கூட mango என்ற வார்த்தை டிரெண்ட் ஆனது. நவீன் பேட்டிங் செய்த போது ரசிகர்கள் விராட் கோலி என ஆர்பரித்தனர். அதேபோல விராட் கோலி பேட்டிங் செய்த போது நவீன் பந்து வீசினார்.
அப்போது ரசிகர்கள் மீண்டும் விராட் கோலி என கோஷமிட்டனர். அப்போது விராட் கோலி வேண்டாம் என கைசைகை மூலம் காட்டினார். இதனையடுத்து நவீன் உல் ஹக் ஓடி வந்து விராட் கோலியை கட்டியணைத்து இருவரும் கைகுலுக்கி சிரித்தனர். இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.