இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே நேற்று ஆன்லைன் மூலம் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா தாக்கம் முடிந்து எத்தகைய கிரிக்கெட் (சர்வதேச அல்லது உள்ளூர்) போட்டிகளில் விளையாடுவது என்றாலும், அதற்கு முன்பாக வீரர்கள் முறையாக பயிற்சி எடுத்து தயாராவதற்கு குறைந்தது 3 அல்லது 4 வாரங்கள் அவசியமாகும். ஆனால் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட வேண்டும்.
அணியின் டிரெய்னர் வழங்கும் ஆலோசனைப்படி வீட்டிலேயே தினமும் பயிற்சி மேற்கொள்கிறேன். தொடர்ந்து நல்ல உடல்தகுதியுடனும், நேர்மறை எண்ணத்துடனும் இருக்க வேண்டியது முக்கியமாகும். எனது மனைவிக்கு சமையலிலும், வீட்டை சுத்தப்படுத்துவதிலும் உதவுகிறேன். எனது மகளுடன் அதிக நேரத்தை செலவிடுகிறேன். அவளுடன் உற்சாகமாக விளையாடுகிறேன். நான் ஜூடோவில் கருப்பு பெல்ட் வாங்கியவன். அதனால் வாரத்துக்கு 3-4 தடவை கராத்தே பயிற்சியில் ஈடுபடுகிறேன்.
மறுபடியும் கிரிக்கெட் எப்போது ஆரம்பிக்கும் என்பது தெரியாது. களம் காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் எனது பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். எது எப்படி என்றாலும் நமது வாழ்க்கை முறையில் இனி நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். அதே சமயம் கிரிக்கெட் களத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
வழக்கமாக விக்கெட் வீழ்த்தியதும் கைகுலுக்கியும், கட்டிப்பிடித்தும் கொண்டாடுவோம். இனி இந்த பாணியை தவிர்க்க (கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால்) வேண்டியது வரும். விக்கெட்டை வீழ்த்தியதும் நமஸ்தே (இருகரம்கூப்பி வணக்கம் தெரிவிப்பது) சொல்வது போன்று ஏதாவது ஒன்றை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம்.
முந்தைய காலத்தில் விக்கெட் சரிந்ததும் பீல்டர்கள் அங்கிருந்து ஓடிவராமல் தனது பகுதியில் நின்றபடியே கைதட்டுவார்கள். அந்த பழைய நடைமுறையை நாம் பின்பற்றுவோம் என்று நினைக்கிறேன். கைகுலுக்குவதற்கு பதிலாக நமஸ்தே சொல்லலாம். எந்த விஷயத்தையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.
இந்திய கேப்டன் விராட் கோலியும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தும் மிகச்சிறந்த வீரர்கள். இருவரின் ஸ்டைலும், ஆட்ட அணுகுமுறையும் முற்றிலும் வித்தியாசமானது. அவர்கள் வேகப்பந்து வீச்சிலும், சுழற்பந்து வீச்சிலும் திறம்பட விளையாடக்கூடியவர்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சுமித்துடன் இணைந்து மிகவும் ரசித்து அனுபவித்து விளையாடி இருக்கிறேன். கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்வது எப்போதும் வேடிக்கையானது. ஒருவருக்கொருவர் சாதனையை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வோம். எங்களிடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. பேட்டிங் போது ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து ஆடுவோம்.
இவ்வாறு ரஹானே கூறினார்.