Tamilவிளையாட்டு

விராட் கோலியின் முடிவு பாராட்டுக்குரியது – ஸ்டீவன் சுமித்

அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வெறும் 36 ரன்னில் சுருட்டி வீசிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது. டேவிட் வார்னர் இன்னும் முழு உடல்தகுதியை எட்டாததால் அவர் 2-வது டெஸ்டிலும் ஆட வாய்ப்பில்லை. எனவே ஆஸ்திரேலிய அணி மாற்றமின்றி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் 31 வயதான ஸ்டீவன் சுமித் முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஒரு ரன்னில் அஸ்வின் சுழலில் சிக்கினார். 2-வது இன்னிங்சில் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். மெல்போர்ன் மைதானம் அவருக்கு ராசியானது. இங்கு அவர் 7 டெஸ்டில் விளையாடி 4 சதம், 3 அரைசதம் உள்பட 908 ரன்கள் எடுத்துள்ளார்.

மறுபடியும் முத்திரை பதிக்கும் வேட்கையுடன் காத்திருக்கும் ஸ்டீவன் சுமித் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அடிலெய்டு டெஸ்டில், அஸ்வின் வீசிய அந்த பந்து சுழன்று திரும்பவில்லை. அது பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச்சாக மாறியது. துரதிர்ஷ்டவசமாக இது போன்று நடக்கத் தான் செய்யும். நான் ஆட்டம் இழப்பதற்கு முந்தைய இரு பந்துகளும் ஓரளவு சுழன்று திரும்பின. ஆனால் நேராக வந்து விக்கெட்டை பறித்த அந்த பந்தை நான் நினைத்த மாதிரி ஆடவில்லை. அஸ்வினின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. அவர் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது உலகத்தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார். தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த டெஸ்டில் அவரது பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்வேன் என்று நம்புகிறேன்.

இந்திய கேப்டன்விராட் கோலி எஞ்சிய 3 டெஸ்டுகளில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும். முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்து ரன் சேர்த்த விதம் (74 ரன்) அருமையாக இருந்தது. அந்த டெஸ்ட் முடிந்து அவரை களத்தில் சந்தித்த போது, ‘பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள். குழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும். எனது வாழ்த்துகளை உங்களது மனைவியிடம் சொல்லிவிடுங்கள்’ என்று அவரிடம் கூறினேன். அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் தொடர்ந்து இங்கேயே (ஆஸ்திரேலியா) இருந்தால் அவருக்கு நிறைய நெருக்கடி இருந்திருக்கும். முதல் குழந்தை பிறப்புக்காக அவர் தாயகம் திரும்ப எடுத்த முடிவு பாராட்டுக்குரியது. அதற்கு அவர் தகுதியானவர். அவரது வாழ்க்கையில் இது ஒரு மைல்கல். இந்த தருணத்தை நிச்சயம் தவற விடக்கூடாது.

அடிலெய்டு டெஸ்டில் எங்களது வேகப்பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. நான் பார்த்தமட்டில் அனேகமாக கடைசி 5 ஆண்டுகளில் மிகச்சிறந்த பந்து வீச்சு இது தான். குறை சொல்ல முடியாத அளவுக்கு துல்லியமாக பந்து வீசினர். இது போன்ற பந்துகள் பேட்டின் முனையில் பட்டு கேட்ச்சுக்குத் தான் செல்லும். இந்திய அணியினர் அந்த தோல்வியையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அதைவிட்டு நகர்ந்து தொடர்ந்து நேர்மறை எண்ணத்துடன் இருக்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு வீரர்களும் தனித்துவமானவர்கள். தாங்கள் ஆட்டம் இழந்த விதம் குறித்து டெஸ்ட் போட்டி முடிந்ததும் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களுடைய அடுத்த போட்டியின் செயல்பாடு அமையும். இன்னும் என்ன செய்திருக்கலாம் என்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்துக்கு பிறகு இப்படி யோசிப்பது நல்லது.

மெல்போர்னில் அரங்கேறும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சிறு வயதில் கனவாக இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மறுநாள் இந்த போட்டியை குடும்பத்தினருடன் பார்த்த அனுபவம் உண்டு. ரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் களம் காண்பது எப்போதும் சிலிர்ப்பாக இருக்கும். இந்த முறையும் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் சிட்னியில் 3-வது டெஸ்ட் (ஜன.7-11) நடக்குமா? என்று கேட்கிறீர்கள். என்னை பொறுத்தரை திட்டமிட்டபடி சிட்னியில் டெஸ்ட் போட்டி நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இங்கு ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொருவரும் சிட்னியில் விளையாடுவதற்கே முன்னுரிமை அளிப்போம். அதே சமயம் மருத்துவ, சுகாதாரத்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடப்போம்.

‘இனி எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் சிவப்பு பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு(பிங்க்) நிற பந்தை பயன்படுத்த வேண்டும்’ என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறிய யோசனையில் எனக்கு உடன்பாடு இல்லை. டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்து நீடிக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். ஒரு தொடரில் ஒரு டெஸ்டில் பிங்க் பந்து பயன்படுத்தினால் போதும் நன்றாக இருக்கும்.

இவ்வாறு சுமித் கூறினார்.