விராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக இருந்தார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு, 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக நீக்கியது.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் 20 ஓவர் போட்டிக்கு கேப்டனாக உள்ளார். ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி தானாக விலக வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் விரும்பியது. இதற்காக அவருக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அவர் விலக மறுத்ததால் நீக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி விளக்கம் அளித்து இருந்தார்.
அவர் கூறும்போது, ‘ஒருநாள் போட்டிக்கும், 20 ஓவர் போட்டிக்கும் தனித்தனி கேப்டன் இருப்பதை தேர்வுக் குழுவினர் விரும்பவில்லை. இதனால்தான் கோலியிடம் இருந்த ஒருநாள் கேப்டன் பதவி ரோகித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது’ என்றார்.
இந்த நிலையில் விராட் கோலி விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் சாடியுள்ளார். விராட் கோலிக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சல்மான் பட் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு கோலி பதவி விலகுவதை கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. வெள்ளைநிற பந்து போட் டிக்கு (ஒருநாள் போட்டி, 20 ஓவர்) வெவ்வேறு கேப்டன் இருப்பது சரியாக இருக்காது. இதனால்தான் கோலியிடம் இருந்த ஒருநாள் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு சரியானதுதான்.
ஆனால் இந்த விவகாரத்தில் விராட் கோலியை கிரிக்கெட் வாரியம் நடத்திய விதம்தான் சரியில்லை. அவர் பதவி விலக 2 நாள் கெடு விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரத்தை காட்டுகிறது. விராட் கோலிக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும். அவர் தனது நாட்டுக்காக என்ன செய்தார் என்பதை பார்த்து மரியாதை செய்திருக்க வேண்டும். அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார்.
இவ்வாறு சல்மான் பட் கூறியுள்ளார்.