X

விராட் கோலிக்கு சவுரவ் கங்குலி அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 33 வயதான அவர் சர்வதேச போட்டியில் சதம் அடித்து 3 ஆண்டுகள் ஆகிறது. அவர் கடைசியாக 2019-ம் ஆண்டு சதம் அடித்து இருந்தார். தற்போது விராட் கோலியின் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதை தொடர்ந்து 20 ஓவர் போட்டிக்கான அணியில் விராட் கோலியின் இடம் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வேகப்பந்து வீரர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரை கேள்வி எழுப்பி இருந்தனர்.

அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தனர். அதே நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி ஆடவில்லை. இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்திலும் அவர் விளையாடுவது சந்தேகமே.

இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி அறிவுரை வழங்கி உள்ளார். அவர் தனது வழியை கண்டுபிடித்து வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

விராட் கோலி தற்போது சவாலான நிலையில் உள்ளார். இது அவருக்கும் தெரியும். அவர் ஒரு மிகச்சிறந்த வீரராக இருந்துள்ளார். அவர் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அவர் தனது வழியை கண்டறிந்து வெற்றி பெற வேண்டும். 12 முதல் 13 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அவர் ஒருவரால் மட்டுமே மீண்டும் நல்ல நிலைககு வர இயலும்.

விளையாட்டில் இது போன்று நடைபெறுவது வழக்கம் தான். ஒவ்வொரு வருக்கும் நடந்துள்ளது. டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும், எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது. அது போலதான் தற்போது விராட் கோலிக்கு நடந்துள்ளது.

எதிர்கால வீரர்களுக்கும் இது மாதிரியான நிலை ஏற்படும். இது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இதனால் விராட் கோலி தனது குறைபாட்டை அறிந்து தனக்குரிய விளையாட்டை ஆட வேண்டும்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஒரு ரன்னும், 3-வது போட்டியில் 11 ரன்னும் எடுத்தார். முன்னதாக நடந்த 5-வது போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 31 ரன்களே எடுத்தார்.

விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற முடியும். இல்லையென்றால் அவர் இடம் பெறுவது கடினமாகிவிடும்.

உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ந் தேதி தொடங்குகிறது. கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது அவருக்கு கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.