விராட் கோலிக்கு கண்டனம் தெரிவித்த ஐசிசி
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் விராட் கோலி களம் இறங்கினார். வழக்கத்திற்கு மாறாக விராட் கோலி ரன்கள் அடிக்க திணறினார்.
அதேசமயத்தில் ரோகித் சர்மாவை வீழ்த்தி இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஹென்ரிக்ஸ் விராட் கோலிக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஓடும்போது பந்து வீசிய பின் ஆடுகளத்தில் நின்றிருந்த ஹென்ரிக்ஸ் மீது வேகமாக ஒரு இடி இடித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஹென்ரிக்ஸ் எளிதாக எடுத்துக்கொண்டு சிரித்துக் கொண்டு சென்றுவிட்டார். அப்போது போட்டியை பார்த்துக் கொண்ட ரசிகர்கள், விராட் கோலிக்கு எப்படியும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறிக் கொண்டனர்.
அதன்படியே ஐசிசி விராட் கோலியை எச்சரித்ததுடன், தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஐசிசி தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘இந்திய அணி கேப்டன் விராட் கோலி எச்சரிக்கப்படுகிறார். அதேபோல் வீரர்கள் நன்னடத்தைக்கான விதிமுறையில் முதல் லெவல் குற்றத்தை செய்ததற்காக தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
விராட் கோலி இதற்கு முன் இதுபோன்று இரண்டு முறை தகுதி நீக்கத்திற்கான புள்ளிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.