விரக்தி என்பதை நான் விரும்பியதே இல்லை – அஸ்வின்
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் மளமளவென விக்கெட்டுக்களை இழந்தாலும் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டர், மகாராஜ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுமார் 40 ஓவர்களுக்கு மேல் சந்தித்த இந்த ஜோடி 100 ரன்கள் குவித்தது.
இறுதியில் அஸ்வின் இந்த ஜோடியை பிரித்தார். முதல் இன்னிங்சில் 28.4 ஓவர்கள் வீசி 69 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இந்திய பந்து வீச்சாளர்களின் பொறுமையை இந்த ஜோடி சோதித்தாலும், நான் விரக்தியடையவில்லை. மீண்டும் பந்து வீசுவது எனக்கு மகிழ்ச்சி என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ”நான் பந்து வீசும்போது விரக்தியடைந்ததே கிடையாது. விரக்தி என்பதை நான் விரும்பியதே இல்லை. அதைக் காட்டிலும் மீண்டும் பந்து வீசவே விரும்புவேன். மீண்டும் மீண்டும் யார் பேட்டிங் செய்ய வந்தாலும், நான் மீண்டும் பந்து வீச மகிழ்ச்சியாக இருப்பேன்.
கடைநிலை பேட்ஸ்மேன்கள் என்று மிகைப்படுத்தி பேசுகிறார்கள். யாராவது ஒருவர் சிறப்பாக பேட்டிங் செய்தால், அவர் சிறப்பாக பேட்டிங் செய்பவர். தற்போதைய நாளில், யாருமே மோசமாக பேட்டிங் செய்பவர் அல்ல. நம்முடைய அணியில் 11-வது வீரர் வரை சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள்.
சிறந்த ஆடுகளத்தில் பிலாண்டர் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவருடைய தடுப்பாட்ட நுட்பம் சிறப்பாக உள்ளது. இந்திய அணி பாலோ-ஆன் கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. எங்கள் அணி கேப்டன் இதுகுறித்து முடிவு செய்வார்” என்றார்.