X

வியாபார நோக்கத்தோடு வன்கொடுமை சட்டத்தை அனுகுவதா? – நடிகை கஸ்தூரி தாக்கு

முகநூலில் அவதூறாக கருத்து கூறிய நடிகை கஸ்தூரி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரம்பலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விடுதலை சிறுத்தை கட்சியிலும் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். வி.சி. கட்சியை சேர்ந்த சிலர் என்னை சமூக வெளியில் தாக்கியும் பொய் பிரசாரங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

போலீசில் பொய்புகாரும் அளித்துள்ளனர். திருமாவளவனுக்கும் எனக்கும் விரிசலை ஏற்படுத்தவும் பட்டியிலினத்தவருக்கு நான் எதிரானவள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் முயல்கின்றனர்.

கடந்த வாரம் முகநூலில் புனிதத்தலங்களை அவமதிக்கும் வி‌ஷமிகளை விமர்சித்து பதிவிட்டிருந்தேன். அப்பதிவில் எந்த தனி நபரையோ சமூகத்தையோ நான் குறிப்பிடவில்லை. ஆனால் திருமாவளவன் மற்றும் அவர் சமூகத்தை சார்ந்தவர்களை பற்றி நான் பதிவிட்டதாக கூறி என்னை வம்பிழுக்கின்றனர்.

எந்த தனி நபரையோ ஜாதியையோ நான் குறிப்பிட்டு பேசவில்லை என்ற போது என் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் கொடுப்பது அச்சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயலாக உள்ளது. இப்படி ஆதாரமற்ற பொய் வழக்கு போட்டால் அதற்கான பின்விளைவுகளை அந்த வழக்கறிஞர்கள் சந்திக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என் கருத்து குற்றம் ஆகிவிடாது. இதுபோன்ற அவதூறு நடவடிக்கைகள் திருமாவளவனுக்கு தெரிந்து நடக்கவில்லை என்றே நம்புகிறேன். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கட்சி தலைமை கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags: south news