Tamilவிளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று லண்டனில் தொடங்குகிறது

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அவர்களுக்கு ஆதரவு தந்த பெலாரஸ் ஆகிய இரு நாட்டு வீரர், வீராங்கனைகள் விம்பிள்டனில் பங்கேற்க போட்டி அமைப்பு குழு தடை விதித்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றிக்கு தரவரிசை புள்ளிகள் வழங்கப்படாது என்று அறிவித்தது. இந்த சலசலப்புக்கு மத்தியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சுக்கும் (செர்பியா), முன்னாள் சாம்பியன் ரபெல் நடாலுக்கும் (ஸ்பெயின்) இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனை வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து) பட்டம் வெல்லபிரகாசமான வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த முறை அதிக கவனத்தை ஈர்த்துள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புகிறார். 40 வயதான செரீனா 7 முறை விம்பிள்டன் உள்பட 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற அனுபவசாலி. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்து விடுவார்.

இந்த விம்பிள்டன் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.387 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் கோப்பையை ஏந்தும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.19¼ கோடி கிடைக்கும். 2-வது இடத்தை பெறுவோருக்கு ரூ.10 கோடி வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடி ரூ.5¼ கோடியை பரிசாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.