விம்பிள்டன் டென்னிஸ் – கோப்பையை வென்று சாதனை படைத்த ஜோகோவிச்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான ஜோகோவிச் (செர்பியா) 6–7 (4–7), 6–4, 6–4,6-3 என்ற செட் கணக்கில் 7-வது வரிசையில் உள்ள பெரிட்டினியை (இத்தாலி) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
இதன் மூலம் ஜோகோவிச் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். தற்போது இந்த 3 வீரர்களும் 20 கிராண்ட்சிலாம் பட்டத்தோடு முதல் இடத்தில் உள்ளனர்.
ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 6-வது முறையாக கைப்பற்றியுள்ளார். விம்பிள்டனை அதிக தடவை வென்ற வீரர்களில் அவர் தற்போது 4-வது இடத்தில் உள்ளார். ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரெஞ்ச் ஓபனை 2 தடவையும், அமெரிக்க ஓபனை 3 முறையும் வென்றுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை நடந்த 3 கிராண்ட்சிலாம் பட்டத்தையும் அவர்தான் கைப்பற்றினார். இதே மாதிரி 2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் ஜோகோவிச் 3 கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று இருந்தார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை நியூயார்க்கில் நடக்கிறது.