X

விமானம் மாயமான போது கட்டுப்பாட்டு அறையில் இருந்த மனைவி!

அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் கடந்த திங்கட்கிழமை அன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.

மதியம் ஒரு மணிக்கு புறப்பட்ட விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாயமான விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாயமான விமானத்தின் விமானி அரியானாவைச் சேர்ந்த ஆஷிஷ் தன்வாரின் மனைவி சந்தியா, விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில்தான் பணியாற்றி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விமானி ஆஷிஷ் தன்வாரின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘ஆஷிஷ், சந்தியா இருவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. விமானப்படையில்தான் இருவருக்கும் வேலை.

விமான கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய சந்தியாதான், ஆஷிஷ் சென்ற விமானம் மாயமானது தொடர்பாக முதல்முறையாக எங்களுக்கு தகவல் கொடுத்தார்.

முதலில் விமானம் எங்கோ மாயமாகியிருக்கிறது என நினைத்தோம். இப்போது எங்காவது மோதியிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என கூறினார்.

இதையடுத்து மற்றொரு உறவினர் கூறுகையில், ‘ஆஷிஷ் ராணுவத்தில் பணியாற்றவே அதிகம் விரும்பினான். வீட்டில் மொத்தம் 6 பேர்.

இதில் 5 பேர் பாதுகாப்புத்துறையில்தான் இருக்கிறார்கள். ஆஷிஷ் விமானப்படையில் சேர்ந்தான். ஆஷிஷின் அப்பாவும் ராணுவ அதிகாரிதான்’ என கூறினார்.

பல்வாலில் உள்ள ஆஷிஷ் வீட்டில் கவலையுடன் அனைத்து உறவினர்களும் கூடியுள்ளனர். மேலும் ஆஷிஷ் தந்தை ராதே லால் அசாமுக்கு விரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: south news