களவாணி, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விமல். நான்கு கோடி ரூபாய் கடன்பாக்கி வைத்துள்ளதால், அவரை வைத்து படம் தயாரிப்போர், என்னிடம் ஆலோசிக்க வேண்டும்‘ என, தயாரிப்பாளர் சங்கத்திற்கு, தயாரிப்பாளர் கோபி என்பவர் கடிதம் எழுதி உள்ளார்.
அரசு பிலிம்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கோபி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விமல் தயாரித்த, மன்னர் வகையறா படத்திற்கு, அவர் கேட்டதால், 5.35 கோடி ரூபாய் கடன் கொடுத்தேன். படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு பின், 1.35 கோடி ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்தார்.
மீதித்தொகையை, படத்தில் நடித்து, அதில் கிடைக்கும் சம்பளத்தில் இருந்து தருவதாக கூறினார். அதை நம்பி, நானும் பொறுமையாக இருந்தேன்.
ஆனால், மன்னர் வகையறா படத்திற்கு பின், ஏழு படங்களில் விமல் நடித்து விட்டார். என் பணத்தை, இதுவரை தரவில்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி, என் அனுமதி இல்லாமல், அவர் நடித்த எந்த படத்தையும் வெளியிட முடியாது.
விமலை வைத்து படம் தயாரிப்பவர்களும், படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளவர்களும், என்னை அணுகி, ஆலோசிக்க கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நலனுக்காகவே, இந்த கடிதத்தை அனுப்புகிறேன்; வேறு எந்த உள்நோக்கமும் இல்லை’.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.