விமர்சனம் செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு மீம்ஸ் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வின்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.

34 வயதான அஸ்வின் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெடுகள் வீழ்த்தி உள்ளார். அவர் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.

இதற்கிடையே அஸ்வின் எக்காலத்திற்கும் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்று அழைப்பதில் தனக்கு சிக்கல் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருந்தார். வெளிநாடுகளில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றாதது குறித்து அவர் தனது விமர்சனத்தில் தெரிவித்து இருந்தார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதமானது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் இதற்கு பதிலடி கொடுத்து இருந்தார். அஸ்வின் சிறந்த பவுலர் என்று பாராட்டி இருந்தார்.

இதேபோல தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்தும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்தார். அவர் ஒரு சகாப்தம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்பது கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் உயரிய பாராட்டு. டான் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், தெண்டுல்கர், விராட்கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் என்னுடைய மனதில் எக்காலத்துக்கும் சிறந்த வீரர்களாக இடம் பெற்று உள்ளனர்.

உரிய மரியாதையுடன் எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்ற பட்டியலில் அஸ்வின் இடம் பெறவில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மஞ்ச்ரேக்கர் டுவிட்டை மறுபதிவு செய்து அஸ்வின் கிண்டல் செய்து உள்ளார்.

அந்நியன் படத்தில் சாரியிடம் (நடிகர் விவேக் கதாபாத்திரம்) “அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்கிறது” என்று அம்பி (நடிகர் விக்ரம் கதாபாத்திரம்) கூறும் மீம்சை அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

இந்த கிண்டல் பதிலடி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools