விமர்சனத்துக்கு உள்ளான சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். ஐபிஎல் தொடரின் சேர்மனாக பிரிஜேஷ் பட்டேல் உள்ளார். ஐபிஎல் தொடர்பான அறிவிப்புகளை பிரிஜேஷ் பட்டேல்தான் வெளியிட வேண்டும்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐபிஎல் போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகமாக இருந்தது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் போட்டி நடைபெறும் தேதிகள், மைதானங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் பெரும்பாலான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவற்கு முன் கங்குலி தெரிவித்தார். அதேபோல் தற்போது விமர்சனத்திற்கு உள்ளான ரோகித் சர்மா காயம் குறித்தும் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.
தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷி கூட அதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் கங்குலி, ரோகித் சர்மா ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி குறித்து கவனமாக செயல்பட வேண்டும். பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன் ஜாக்கிரதையாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திலிப் வெங்சர்க்கார் ‘‘ஏன் இவர் நீக்கப்பட்டார், ஏன் இவரை தேர்வு செய்யவில்லை, ஏன் இவரை கருத்தில் கொள்ளவில்லை, சிலர் ஏன் இதுவரை ஃபிட்ஆக வில்லை என்று தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷி சொல்ல வேண்டியதை, கங்குலி கூறுவது ஆச்சர்யமாக இருக்கிறது.
இதேபோல்தான் ஐபிஎல் தொடரின் தேதி போன்றவற்றை ஐபிஎல் சேர்மனுக்குப் பதிலாக தெரிவித்தார். இதுபோன்ற செயலை பார்ப்பதற்கு கவலையாக இருக்கிறது.
மற்றவர்களின் சான்றுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாரா? அல்லது மற்றவர்களை விட தனக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறாரா?’’ என விமர்சனம் செய்துள்ளார்.