Tamilசெய்திகள்

விமர்சனங்களை புறம் தள்ளிவிட்டு மக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை ரிங்ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கில் தமிழக வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகன் தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி திருமணம் இன்று நடந்தது. திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். பிறகு அவர் பேசியதாவது:

நான் ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பேசுவதற்காக சில குறிப்புகளை எடுத்து செல்வது வழக்கம். ஆனால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மணமக்களை வாழ்த்துவதற்கு குறிப்புகளை எடுத்துச் செல்வதில்லை. ஆனால் இந்த திருமண விழாவில் பேசுவதற்காக குறிப்புகளை எடுத்து வந்துள்ளேன். அந்த அளவுக்கு மூர்த்தி அவர்கள் இந்த துறையில் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார்.

இதுவரை இல்லாத வகையில் 13 ஆயிரத்து 913 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்ல பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திங்கட்கிழமை தோறும் குறைகேட்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் இவைகள் நடத்தப்படவில்லை. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர சாய்தள பாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்த உயர் மேடை, தடுப்புகள் அகற்றப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகங்கள், திராவிட மாடல் ஆட்சிக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

மேலும் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் போலி ஆவணங்களை ரத்து செய்வதற்குரிய சட்ட திருத்தம் அமைச்சரவை கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். அவரும் ஒப்புதல் தந்து விட்டார். இந்த சிறப்பு சட்டத்தை பின்பற்ற மற்ற மாநிலங்களும் நம்மை அணுகி வருகிறார்கள். இதுபோன்று எத்தனையோ மாற்றங்களை தனது துறையில் செய்து மூர்த்தி காட்டியுள்ளார். மூர்த்தி பெரிதா? கீர்த்தி பெரிதா? என்பார்கள். என்னை பொறுத்தவரை மூர்த்தி தான் பெரிது என்று சொல்லுவேன். அந்த அளவுக்கு அவர் பணியாற்றி வருகிறார்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது மக்கள் எந்த நம்பிக்கையில் நமக்கு வாக்களித்தார்களோ அந்த நம்பிக்கையை காப்பாற்றுகின்ற வகையிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். நம்மை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்தார்கள். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற ஆட்சி நடந்து வருகிறது.

தேர்தல் நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தி.மு.க. ஆட்சி அமைய தேவையான வெற்றி கிடைத்த நிலையில் நான் கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்பட்டு லயோலா கல்லூரிக்கு சென்று அங்கே எனது கொளத்தூர் தொகுதிக்கான வெற்றி சான்றிதழை பெற்று நம் தலைவர் கலைஞரின் நினைவு மண்டபத்திற்கு சென்று மரியாதை செய்து வெற்றிக்கனியை சமர்ப்பித்தோம்.

அந்த நேரத்தில் மக்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு மேலும் சில வாக்குறுதிகளையும் அறிவித்தோம். நமக்கு ஓட்டு போட்டவர்களுக்கு பணியாற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், நமக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பணியாற்றி இவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படும் அளவுக்கு பணியாற்றுவோம் என்று கூறினேன். அந்த வகையில் செயலாற்றி வருகிறோம்.

இப்போது மக்கள் மத்தியில் நம் மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பல மடங்கு நம்பிக்கையோடு இந்த ஆட்சிக்கு மக்கள் துணை நின்று வருகிறார்கள். இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று நம்மை விட மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம் செல்லுகின்ற போது ஒவ்வொரு மாவட்ட ங்களிலும் மக்கள் வழி நெடுக நின்று வரவேற்கிறார்கள். பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் சாலைகளின் இருபுறமும் திரண்டு நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். வரவேற்பு மட்டுமின்றி கோரிக்கை மனுக்களையும் தருகிறார்கள்.

பலமுறை கொடுத்துவிட்டோம் என்ற எதிர்பார்ப்பின்றி இவரிடம் மனு கொடுத்தால் நடக்கும் என்ற நம்பிக்கையில் இந்த மனுக்களை தருகிறார்கள். அந்த மனுக்களை மக்கள் தரும்போது நன்றி என்று சொல்லி தருகிறார்கள். நம்பிக்கையோடு தருகிறார்கள். மேலும் தற்போது உங்கள் உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி என்றால் இந்த அரசு மீதும், என் மீதும் மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையையும், பாசத்தையும் வைத்துள்ளார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறேன்.

கழக அரசு பல்வேறு சாதனைகளை நிறைவேற்றி வருகிறது. மதுரையில் மாபெரும் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. 70 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. அதுபோல தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைய சட்டசபையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணி தொடங்கும். அதுபோது மதுரை எல்லையில் கீழடி பண்பாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

சென்னையை போல மதுரையிலும் பெருநகர குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பன்னடுக்கு வாகன காப்பகம் மற்றும் தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு அரங்கு ஆகியவை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மதுரை மட்டுமின்றி ஒவ்வொரு நகரங்களிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நான் மட்டுமல்ல அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் துறையில் பணிகளை செய்து வருகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையை நாம் பெற்றுள்ளோம். நேற்று நெல்லை மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு சுவரொட்டியை பார்த்தேன். அதில் ஏ.எம். பி.எம். பார்க்காத சி.எம். என்று வாசகம் இடம் பெற்றிருந்தது.

நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதை குறிக்கும் வகையில் அந்த சுவரொட்டியை ஒட்டி இருந்தார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை எம்.எம். (மினிட் டூ மினிட்) சி.எம். என்ற நிலையில் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பணி செய்து டி.என்.நம்பர்-1 என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில் ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காமல் நம் பணிகளை செய்து வருகிறோம்.

இந்த சந்தடி சாக்கில் ஒரு காமெடியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி ஒரு காமெடியை கூறியிருக்கிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே அவரிடம் பேசுவது இல்லை. இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் பேசுவதாக ஒரு புருடா விட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததோடு உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்த அவர் இப்படி காமெடி பண்ணுகிறார். தற்போது அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியே டெம்பரவரி பதவியில் இருக்கிறார். எனவே டெம்பரவரியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக அவர் கூறி வருகிறார்.

நமக்கு நல்லது செய்வதற்கே நேரம் போதவில்லை. எனவே இது போன்ற பொய் பிரசாரங்களை பற்றி பேச நேரம் எங்கே இருக்கிறது? எனவே இருக்கின்ற காலங்களில் இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு மக்களுக்கு நன்மை செய்வோம். மக்களிடம் நம்பிக்கையை பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.