விபத்து ஏற்படுத்துபவர்கள் போலியான இன்சூரன்ஸ் கொடுத்து தப்பிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு – குவியும் புகார்கள்
விபத்தில் சிக்கி உயிர் இழப்பவர்களின் குடும்பத்துக்கும், விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் பிழைத்தவர்களுக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருப்பது இன்ஸ்சூரன்ஸ் மூலம் உரிய இழப்பீட்டு தொகையை பெறுவதுதான். இதற்கு விபத்தை ஏற்படுத்துபவர்களின் வாகனங்களுக்கு முறையாக இன்சூரன்ஸ் கட்டி இருக்க வேண்டும். அந்த வாகன இன்சூரன்சை அடிப்படையாக வைத்துதான் கோர்ட்டு மூலம் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்குரிய இழப்பீட்டு தொகையை பெற முடியும்.
ஆனால் சமீபகாலமாக வாகன விபத்தில் சிக்கியவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் விபத்தை ஏற்படுத்தியவர்கள் உண்மையாக இன்சூரன்ஸ் தொகை கட்டாமல், கட்டியதுபோல போலியான இன்சூரன்ஸ் சான்றிதழ்களை கொடுத்து தப்பிச்சென்று விடுகிறார்கள். இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உரிய இழப்பீட்டு தொகை பெறமுடியாமல் போக வாய்ப்பு உள்ளது.
மேலும் கார் வைத்திருப்பவர்கள், காருக்கான இன்சூரன்ஸ் தொகை செலுத்தாமல், மோட்டார் சைக்கிள் என்று ஏமாற்றி இன்சூரன்ஸ் சான்றிதழ் பெற்று ஏமாற்றுவதும், தற்போது அரங்கேறுவதாக சொல்லப்படுகிறது. விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் இதுபோன்ற மோசமான கலாசாரம் தமிழகத்தில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் பரவி வருவதை ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் பெயரில் சமீப காலத்தில் தமிழகத்தில் மட்டும் 137 போலி இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் போக்குவரத்து போலீசார் மூலம் கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறார்களாம். சென்னை மட்டும் அல்லாமல் கோவை, விழுப்புரம், தூத்துக்குடி, நாமக்கல், திருச்சி போன்ற நகரங்களில் இது தொடர்பாக அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் போலீசில் புகார் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாங்காடு மற்றும் நசரத்பேட்டை போலீஸ் நிலையங்கள் உள்பட 12 போலீஸ் நிலையங்களில் உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசிலும் ஆன்லைன் மூலம் போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ்களை கோர்ட்டு வாயிலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டு, உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் உண்மையானதுதானா? என்பதை போலீசார் முறையாக விசாரித்தால், ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கை எடுத்து, மோசடி பேர்வழிகளை சட்டப்படி தண்டிப்பதோடு, விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களும் மோசம் போகாமல் தடுக்க முடியும்.
கோர்ட்டு மூலம் கண்டுபிடிக்கப்படும்போது, காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது. அதற்குள் இதுபோன்ற மோசடி நபர்கள், தங்களது இருப்பிடத்தை மாற்றியோ அல்லது வேறு வழிகளிலோ தப்பிவிடுவார்கள். எனவே வாகன விபத்து இன்சூரன்ஸ் சான்றிதழ் விசயத்தில் போலீசார் உஷாராகவும், விழிப்போடும் இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுபோன்ற போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் குறித்து, சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, தற்போது இதுபோல் போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் சமர்ப்பித்தால், இ சலான் ரசீது போடும்போது கண்டுபிடித்து விடுவோம். இதுபோன்ற புகார்கள் எங்களது கவனத்துக்கு வரவில்லை.சட்டம்-ஒழுங்கு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார்தான் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள். இருந்தாலும், இது தொடர்பாக விழிப்போடு இருக்கும்படி எங்கள் அதிகாரிகளிடம், அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.