தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தியன்று விநாயகருக்கு லட்டு படைக்கப்படும். இந்த லட்டு மிகவும் பிரபலமானது. பாலாப்பூரில் உள்ள பெரிய விநாயகர் சிலைக்கு படையலிடப்பட்டு பின்னர் இந்த லட்டு ஏலம் விடப்படும். இந்த ஆண்டும் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.17.61 லட்சத்திற்கு அதே பாலாப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோலன் ராம் ரெட்டி என்பவர் வாங்கினார். இதனை தெலுங்கானா மாநில கல்வி மந்திரி சபிதா இந்திரா ரெட்டி வழங்கினார். இதன் எடை 21 கிலோ ஆகும். இதனை கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாபேஸ்வரம் பகுதியை சேர்ந்த இனிப்புக்கடைகாரர் தயார் செய்தார்.
முதன் முதலில் 1994-ம் ஆண்டு லட்டை ஏலத்தில் விடும் முறை தொடங்கியது. அப்போது ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரூ.450-க்கு வாங்கினார். கடந்த ஆண்டு ரூ.16.60 லட்சத்திற்கு லட்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
பாலாப்பூர் கணேஷ் லட்டை ஏலத்தில் வாங்குபவர்களின் “எதிர்காலம் பிரகாசமாகவும், அவர்களின் செல்வம் பெருகி தொழில்கள் பன்மடங்கு வளர்ச்சி அடையும்” என்ற அதீத நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.