வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ‘குற்றம் புதிது’ பூஜையுடன் தொடங்கியது!

திகில் மற்றும் திரில்லர் ஜானர் படங்களுக்கு என்று உலகளவில் மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அதிலும், வித்தியாசமான முறையில் சொல்லப்படும் திரில்லர் ஜானர் திரைப்படங்கள் மொழிகளையும் தாண்டி உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை இந்திய சினிமாவில் சொல்லப்படாத புதிய திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாக இருக்கிறது ‘குற்றம் புதிது’.

அறிமுக இயக்குநர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தை ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.கார்த்திகேயன் மற்றும் தருன் கார்த்திகேயன் தயாரிக்கிறார்கள். புதுமுகம் தருன் நாயகனாக நடிக்க, அறிமுக நடிகை செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மதுசூதன் ராவ், ராமச்சந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, சங்கீதா, தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, கரண் பி.கிருபா இசையமைக்கிறார். இயக்குநர் ரஜித் மற்றும் கிரிஷ் பாடல்கள் எழுதுகிறார்கள். கமலக்கண்ணன் படத்தொகுப்பு செய்ய, சந்திரன் கதை ஓவியம் வரைகிறார். வரதா நடனக் காட்சிகளை வடிவமைக்க, கெளசியா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் மே 13 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் ரஜித், “இது ஒரு க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம் என்றாலும், இப்படி ஒரு திரில்லர் ஜானர் படம் தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல, இந்திய சினிமாவில் கூட வந்ததில்லை. அந்த அளவுக்கு புதிய ஒரு கதைக்களத்தை திரில்லர் ஜானரில் சொல்லியிருக்கிறேன். இந்த படத்திற்கு நடிகர் தருன் பொருத்தமாக இருந்ததால் அவரை நாயகனாக தேர்வு செய்திருக்கிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர்.எஸ்.கார்த்திகேயன் கூறுகையில், “என் மகனை நடிகராக வேண்டும் என்று முயற்சித்தோம், அதற்காக பல கதைகளை கேட்டு வந்தோம். குறிப்பாக காதல் கதைகளாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது. ஆனால், இயக்குநர் ரஜித் இந்த கதையை சொன்ன போது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இப்படி ஒரு திரில்லர் ஜானர் இந்திய சினிமாவிலேயே இதுவரை வந்ததில்லை, அந்த அளவுக்கு கதை இருந்ததால் தயாரிக்க முன் வந்தேன். நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.” என்றார்.

நடிகர் மதுசூதனன் ராவ் பேசுகையில், “ரஜித் கதை சொல்லும் போது பாதி தான் கேட்டேன், அப்போதே தெரிந்துவிட்டது இதில் ஏதோ இருக்கிறது என்று, உடனே ஓகே சொல்லிவிட்டேன். வித்தியாசமான திரில்லர் கதை, இதில் எனக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் என் சினிமா பயணத்தில் ஒரு ஸ்பெஷலாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

வரும் மே 23 ஆம் முதல் ஆரம்பமாக இருக்கும் ‘குற்றம் புதிது’ படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools