தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக 18-ந்தேதி அரசு விடு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தங்களது சொந்த ஊரில் வாக்களிக்கும் உரிமை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் நடைபெறுவதால் பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதனால் வெளியூர் செல்லக் கூடியவர்கள் இன்று மாலை முதல் பயணத்தை தொடர்வார்கள் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்றும் நாளையும் கூடுதலாக பஸ்களை விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நாளை மகாவீர் ஜெயந்தி, மறுநாள் வாக்குப்பதிவு, 19-ந்தேதி பெரிய வெள்ளியை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் இன்று மாலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தேர்தல் என்பதற்காக மட்டுமல்ல தொடர் விடுமுறை காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம். தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும். தேர்தல் நடைபெறுவதால் அதனை கவனத்தில் கொண்டு எந்தெந்த பகுதிகளுக்கு சிறப்பு பஸ் தேவை என்பதை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம்.
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களானது விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பாக விடப்படுகிறது.
மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், சேலம், கோவை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், பகுதிகளுக்கு கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய பஸ்கள் மட்டும் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம்போல புறப்பட்டு செல்லும். சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு எதுவும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.