விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 11 ஆயிரமாக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

பட்டொளி வீசிப் பறக்கும் மூவண்ணக் கொடிக்கு முதல் வணக்கம்! அதன் நிழலில் வாழ்கின்ற நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வணக்கம்! 400 ஆண்டுகள் பழமையான இந்த புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்! இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு விழாவைப் பெருவிழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாடினோம். அதற்கான நினைவுத்தான் நேப்பியர் பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ந் தேதியை ‘மகாகவி நாள்’ என அறிவித்தோம். அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தோம். செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டி தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டோம். அவரது படைப்புகளைத் தொகுத்து பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளோம்.

அதுமட்டுமல்ல, அவர் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளத்தில் இயங்கி வரும் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

இந்த வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, இந்த ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க தலா 15 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டதையும் இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது. கிண்டியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதம் தோறும் தியாகிகளுக்கான நிதி கொடையை தொடர்ந்து வழங்கி வருகிறது தமிழக அரசு.

கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியம் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதேபோல் விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித் தோன்றல்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது நமது அரசு.

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news