Tamilவிளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் – தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில்  தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு  354 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஜெகதீசன் சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் ஆட்டமிழந்தார். ரவி ஸ்ரீனிவாசன் 61 ரன்னும், தினேஷ் கார்த்திக் 44 ரன்னும் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் தமிழக வீரர் ஷாருக் கான் அதிரடியாக ஆடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால்

கர்நாடக அணி சார்பில் பிரவீன் துபே 3 விக்கெட்டும்,  பிரஷித் 2 விக்கெட்டும், வைஷக், கரியப்பா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கர்நாடக அணி களமிறங்கியது. ஆனால் தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சு அவர்களை கட்டுப்படுத்தியது.

கர்நாடக அணி 39 ஓவரில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகமாக எஸ்.சரத் 43 ரன்கள் எடுத்தார். நட்சத்திர ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

தமிழக அணி சார்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்மூலம் 151 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு காலிறுதி போட்டியில், உத்தர பிரதேசம் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இமாசல பிரதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.