Tamilவிளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் – இறுதிப் போட்டிக்கு மும்பை முன்னேற்றம்

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், டெல்லி பாலம் ‘ஏ’ ஸ்டேடியத்தில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி, நடப்பு சாம்பியன் கர்நாடகாவை எதிர்கொண்டது.

இதில் முதலில் ‘பேட்’ செய்த மும்பை 49.2 ஓவர்களில் 322 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. தொடக்க ஆட்டக்காரரும், பொறுப்பு கேப்டனுமான பிரித்வி ஷா 122 பந்துகளில் 17 பவுண்டரி, 7 சிக்சருடன் 165 ரன்கள் விளாசினார். இதன் மூலம் விஜய் ஹசாரே போட்டியில் ஒரு சீசனில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை 21 வயதான பிரித்வி ஷா படைத்தார். இந்த சீசனில் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள அவர் 4 சதம் உள்பட 754 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டில் கர்நாடக அணி வீரர் மயங்க் அகர்வால் 8 ஆட்டங்களில் விளையாடி 3 சதம் உள்பட 723 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரித்வி ஷா நேற்று தகர்த்தார்.

பின்னர் 323 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கர்நாடக அணி 42.4 ஓவர்களில் 250 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் மும்பை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்து சாதனை படைத்து இருந்த கர்நாடக தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் இந்த ஆட்டத்தில் 64 ரன்னில் ‘கிளீன் போல்டு’ ஆனார். அவர் இந்த ஆட்டத்திலும் சதம் அடித்து இருந்தால் ‘லிஸ்ட் ஏ’ வகை போட்டியில் தொடர்ச்சியாக அதிக சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்து இருப்பார். அந்த அரிய வாய்ப்பை அவர் கோட்டை விட்டார்.

டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு அரைஇறுதியில் உத்தரபிரதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. வருகிற 14-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை-உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றன.