Tamilசினிமா

விஜய், ஷாருக்கான் எனது இரண்டு தூண்கள் – இயக்குநர் அட்லீ பதிவு

தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் அட்லீ நேற்று (21-09-2022) தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இவருக்கு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரும் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளனர். இதனை அட்லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “என் பிறந்தநாளில் நான் இன்னும் என்ன கேட்க முடியும். என் தூண்களுடன் மிக சிறந்த பிறந்தநாள். மைடியர் ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன் என் தளபதி விஜய்” என்று குறிப்பிட்டுள்ளார்.