X

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனம் பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வணிக வளாகத்தை கைப்பற்றும் பயங்கரவாதிகள் கூட்டத்தில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். இவர் அண்மையில் மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் ”பீஸ்ட் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அந்த படம் குறித்த ட்ரோல்களைப்பார்த்தேன். பொதுவாக ஒருவர் எடையை தூக்கினால் முகத்தில் அந்த கஷ்டம் தெரியும். ஆனால், விஜய் அப்படி எதையும் முகத்தில் காட்டவில்லை. தீவிரவாதியை சூட்கேஸாக எடுத்துச் செல்லும் காட்சிகள் லாஜிக் இல்லாதவை” என குறிப்பிட்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஷைன் டாம் சாக்கோவிற்கு எதிராக கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதாக பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நான் ஊடகத்தின் வாயிலாக தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது என்னுடைய தவறுதான். சாரி நண்பா” என்று குறிப்பிட்டுள்ளார்.