பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வரும் வழக்கு விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே, லண்டன் ரிஜென்ட் பார்க் நகரில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு பங்களா மீது 2012-ல் சுவிஸ் வங்கியில் ரூ.185 கோடி கடன் பெற்றிருந்தார். 5 ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், கடனை திரும்ப செலுத்தாததால் 2017-ல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய உத்தரவிட்டு சுவிஸ் வங்கிக்கு சாதகமாக தீ்ர்ப்பு அளித்தது.
இதையடுத்து, சொகுசு பங்களாவை விட்டு விஜய் மல்லையா வெளியேறுமாறு கடந்த ஆண்டு அக்டோபரில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் லண்டன் சொகுசு பங்களாவை விட்டு மல்லையா தனது குடும்பத்தோடு வெளியேற வேண்டும் என்றும், அதை சுவிஸ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.