விஜய் மல்லையாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, நீதிமன்ற உத்தரவை மீறி தனது பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு 40 மில்லியன் டாலர் பணத்தை மாற்றிவிட்டதாக வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதுபோல பணப் பரிமாற்றம் செய்யக்கூடாது என ஏற்கனவே கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்த ஒரு உத்தரவை மல்லையா மீறிவிட்டதாக அதில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2017ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்தது. அப்போது, மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி விஜய் மல்லையா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அப்போது, நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என அறிவித்த முந்தைய தீர்ப்பு செல்லும் என நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் விஜய் மல்லையாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.