X

விஜய் டிவியின் போலீஸ் புகார் குறித்து மதுமிதா விளக்கம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர். கடந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி திடீரென வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி சட்டப்பிரிவு மேலாளர், நடிகை மதுமிதா மீது சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மதுமிதா ஒப்பந்தப்படி 11 லட்சத்தி, 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 42 நாட்களுக்கு பாக்கி பணம் தருவதாக கூறி இருந்ததாகவும் ஆனால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை மதுமிதா தொடர்பு கொண்டு இரண்டு நாட்களில் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மதுமிதா மறுப்பு தெரிவித்து பேட்டியளித்துள்ளார். அதில், ‘திரைத்துறையில் இதுவரை என் மீது எந்த புகாரும் வந்ததில்லை. நான் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் தற்கொலை மிரட்டல் கொடுக்கவில்லை. மீதி பணம் கேட்டேன். அவர்களும் தர சம்மதித்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் என் மீது ஏன் பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இது குறித்து கேட்க, தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. தனியார் தொலைக்காட்சி நிறுவனமும், கமல் சாரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த விஷயத்தால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன்’ என்றார்.