வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன்.
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிக்காக “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து பாடியுள்ளனர்.
இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க நடிகர் பிரபுதேவா இசைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டதும் ‘அந்தகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘அந்தகன்’ படத்தை கலைப்புலி எஸ் தாணு உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.