ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி, பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு பதிலாக அக்கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யா ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தில் அமீர்கான், நாகசைதன்யா இருவருமே ராணுவ வீரர்களாக நடிக்க உள்ளார்கள். கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை, ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.
நடிகர் நாகசைதன்யா நடிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும். அண்மையில் நடிகை சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், தற்போது அவரது கணவர் நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.