விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா ஆடும் லெவன் அணியில் விளையாடலாம் – ஆசிஷ் நெஹ்ரா
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயத்தால் தொடரில் இருந்து விலகியதால் விஜய் சங்கர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இருவரும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள். ஆகையால் இருவரில் ஒருவர்தான் ஆடும் லெவன் அணியில் இடம்பெற முடியும் என்ற நிலை உள்ளது. ஹர்திக் பாண்டியா இல்லாத போட்டியில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. நேற்றைய போட்டியுடன் விஜய் சங்கர் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதில் இரண்டு முறைதான் பேட்டிங் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இரண்டு முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 45 ரன்கள் அடித்த சங்கர், நேற்றைய போட்டியில் 46 ரன்கள் சேர்த்தார். அத்துடன் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
விஜய் சங்கரின் ஆட்டத்தை கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கருக்கு இடம் கிடைக்கும் எனக்கூறப்படுகிறது. அப்படி இடம் கிடைத்தாலும் ஹர்திக் பாண்டியா ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கும்போது, விஜய் சங்கரும் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இருவரும் ஆடும் லெவன் அணியில் இணைந்து இடம் பிடிக்க முடியும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆசிஷ் நெஹ்ரா கூறுகையில் ‘‘நேற்றைய போட்டியில் வெற்றி நாயகனாக திழ்ந்தது விஜய் சங்கருக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும். விஜய் சங்கரால் இந்திய அணியின் 6-வது அல்லது 7-வது பந்து வீச்சாளராக இருக்க முடியும்.
விஜய் சங்கரின் பந்து வீச்சுத்திறன் ஹர்திக் பாண்டியா அளவிற்கு இல்லை. ஆனால், பேட்டிங்கில் சிறந்த திறனை பெற்றுள்ளார். விஜய் சங்கரால் இந்தியாவின் மேட்ச் வின்னராக முடியும்.
ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் 3-வது பந்து வீச்சாளரான செயல்பட முடியும். விஜய் சங்கரால் 3-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்குள் ஏதாவது ஒரு வரிசையில் பேட்டிங் செய்ய முடியும். இருவரும் முற்றிலும் மாறுபட்ட ஆட்டத்திறன் உடையவர்கள். ஆகையால் இருவரும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற முடியும்” என்றார்.